ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள்

சட்டப்பூர்வ வதிவிட உரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றும் வகையிலான ஒப்பந்தங்களை முன்னெடுக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளது.

டென்மார்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய முயற்சியாக,

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஒரு நாட்டுடன் மக்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

ஐவர் குழு (Group of Five) என்று அழைக்கப்படும் இந்த நாடுகள், திருப்பி அனுப்பப்படுவோருக்கான மையங்களை நடத்தத் தாங்கள் எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.

இந்த ஆண்டு அப்படியான நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும், அது திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கான மையங்களை (return hubs) அமைக்க வழிவகுக்கும் என்றும் ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் கோபன்ஹேகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புலம்பெயர் மக்கள் தொடர்பான விவகாரத்தில் இந்த ஆண்டில் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியுள்ள இந்த ஐவர் குழு, செப்டம்பர் மாத இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரில் மீண்டும் கூடத் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதையும், உறுப்பு நாடுகள் வெளிநாடுகளில் மையங்களை அமைக்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்ட குடியேற்றக் கொள்கை சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.

இது புகலிடம் தேடுவோருக்கான பாதுகாப்புகளை பலவீனப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், ஐரோப்பா கண்டம் முழுவதும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத அமைப்பான 'ஐரோப்பிய அவை'

கடந்த ஜூலை மாதம் திரும்ப அனுப்பும் மையங்கள் (return hubs) குறிப்பிடத்தக்க மனித உரிமை அபாயங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தது; அத்துடன் இந்த விவகாரத்தில் பல அமைப்புகளும் இத்திட்டத்தைக் விமர்சித்துள்ளன.

இந்த நிலையில், 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் புலம்பெயர் மக்களை வெளியேற்றும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று டென்மார்க் எதிர்பார்ப்பதாக, குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

Bootstrap