தனக்கு எதிரான பலத்த விமர்சனங்கள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கிடையில் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டியிடப் போவதாக உலக கால்பந்தாட்ட சங்கமான பிஃபா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, 2027-இல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என இன்ஃபான்டினோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கிண்ண ஆரம்ப விழாவின் போது இது குறித்த கேள்விகளை இன்ஃபான்டினோ தவிர்க்க முற்பட்டபோதிலும் பிஃபா செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, உலகக்கிண்ணப் போட்டிகளின் ஒளிபரப்பு மற்றும் வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் இவரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதனையடுத்து, ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு உட்பட பல பிராந்தியக் கூட்டமைப்புகள் மற்றும் தேசிய சங்கங்கள் இவருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிஃபாவின் அடுத்த தலைவருக்கான தேர்தல் 2027 மார்ச் 18 அன்று மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெறும்.
இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நவம்பர் 18-க்குள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.