போரில் அமெரிக்கா தோற்றுவிட்டது : அதிரவைத்த CIA இயக்குநர்

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது. இதன் காரணமாக தற்போது போர் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த போர் விரைவில் முடிவடைந்து விடும் என அமெரிக்க கருதிய நிலையில், உக்ரைன் - ரஷ்யா போரை போல இந்த போரும் முடிவு தெரியாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் அமெரிக்க ராணுவமும் தங்கள் முக்கிய ஆயுதங்களை இழந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், போரில் நாம் தோல்வியடைந்தோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என முன்னாள் CIA இயக்குநர் லியோன் பனெட்டா (Leon Panetta) கூறியுள்ளார். ஈரான் போர் குறித்துப் பேசிய அவர், ஈரான் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர மிகவும் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்றும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களை போன்ற மற்றொரு தோல்வியடைந்த போராக இது மாறக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தற்போதைய சூழலில் போர் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஏற்று கொள்வது, முடிவடையாத போரை தொடர்வது, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பது என மூன்று வழிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் CIA இயக்குநர் ஒருவரே இந்த போரில் அமெரிக்கா தோல்வியடைந்து விட்டது என்று கூறியுள்ளது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

Bootstrap