நேபாளப் பேரழிவுக்குப் பிறகும் சீனா பிடிவாதம்.. இந்தியாவுக்கு ஆபத்து!!

நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி உடைப்புப் பேரழிவுக்குப் பிறகும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் திட்டத்தை அமைப்பதில் சீனா உறுதியுடன் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது எதிர்கால மின்தேவையைப் பூர்த்தி செய்ய சீனா முன்னெடுத்துள்ள திட்டம் இந்தியாவுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது. திபெத் பகுதியில் அருணாச்சல பிரதேச எல்லைக்கு 200 கிலோமீட்டருக்கு முன்பாக 5 பிரம்மாண்ட அணைகளைக் கட்டி 60 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது. நேபாளப் பேரழிவைத் தொடர்ந்து இந்த திட்டத்தைச் சீனா கைவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்திட்டத்தைச் சேர்த்து, இந்திய மதிப்பில் 14 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ‘இந்த நூற்றாண்டின் அணை' என அழைக்கப்படும் இத்திட்டம், இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவுக்குள் நுழையும் மாபெரும் வளைவு என்ற பகுதியில் இந்த அணை கட்டப்படுவதால், இந்தியாவுக்கு 3 முக்கிய பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதலாவது பாதிப்பு அதீத வெள்ளப் பெருக்கு. பனிப்பாறைகள் உருகுவதால் உருவாகும் பிரம்மபுத்திராவில் அதிக நீர்வரத்து இருக்கும்போது, அணையில் இருந்து திடீரென நீர் வெளியேற்றப்பட்டால் இந்தியப் பகுதிகள் உடனடி வெள்ளத்தைச் சந்திக்கும்.

இரண்டாவது பாதிப்பு அணை உடைப்பு. மிதந்து வரும் பனிப்பாறைகளால் அணையின் பலம் குறைந்து அணை உடைந்தால், அருணாச்சல பிரதேசமும் அஸாமும் பேரழிவைச் சந்திக்கும். மூன்றாவது சுற்றுச்சூழல் பாதிப்பு. பிரம்மபுத்திரா ஆற்றின் பல்லுயிர் தன்மை பாதிக்கப்பட்டு, அஸாமின் காசிரங்கா வனப்பகுதியில் திடீர் வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி ஏற்படும். நேபாளப் பேரழிவைத் தொடர்ந்து, சீனாவின் இந்த அணைத் திட்டம் அடுத்தப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், இதைத் தடுக்க இந்தியா அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Bootstrap