ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்?

ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் ஒரு வித்தியாசமான முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. நாட்டில் தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை போருக்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவை தற்போது குற்றமாகக் கருதப்படுகின்றன. இதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், ஆன்லைன் தளங்களின் வளர்ச்சியால் இந்தத் தொழில் ரகசியமாக தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, OnlyFans தளத்தைச் சேர்ந்த தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் சுமார் 7,900 உக்ரேனியர்கள் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆகையால், இந்தத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வரை வரி வருவாய் கிடைக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். இந்தத் தொகை சுமார் 30,000 ராணுவ ட்ரோன்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம், ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான விவாதம் நேரடியாக உக்ரைனின் போர் நிதி மற்றும் ட்ரோன் தேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் முதல்கட்ட வாக்கெடுப்பில் நிறைவேறி, அடுத்தகட்ட பரிசீலனைக்காக காத்திருக்கிறது.

மேலும், இந்தத் துறையைச் சட்டவிரோதமாக வைத்திருப்பது ஊழலுக்கும் வழிவகுப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில பகுதிகளில் ஆபாசத் தொழில் நடத்துபவர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் பெற்றதாகவும் புகார்கள் வெளியாகியுள்ளன. எனவே, சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் ஒருபுறம் வரி வருவாயை அதிகரிக்கவும், மறுபுறம் ஊழலைக் கட்டுப்படுத்தவும் முடியும் என ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், 30,000 ட்ரோன்களுக்கான நிதி என்பது அரசின் மொத்த பாதுகாப்புச் செலவுடன் ஒப்பிடும்போது சிறிய தொகையே. இருந்தபோதிலும், போர்க்காலத்தில் உக்ரைன் தனது உள்நாட்டு வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க முயல்வதன் வெளிப்பாடாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது. மசோதா இன்னும் சட்டமாகவில்லை என்பதால், உக்ரைனில் ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் முடிவு இறுதி செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் விவாதத்திலேயே உள்ளது.

Bootstrap