பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், துணை ஜனாதிபதி சாரா டுடர்தேவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மாநாடு ஒன்றில் பேசிய சாரா டுடர்தே, தான் கொலை செய்யப்பட்டால் ஜனாதிபதி பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மார்ட்டின் ருமுல்டெஸ் ஆகியோரை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக மிரட்டல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சாரா டுடர்தே பிணைக் கோரி மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த குயிசான் நீதிமன்றம் கைது உத்தரவை இரத்து செய்து, அவருக்கு பிணை வழங்கியுள்ளது.
இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சாரா டுடர்தே, தன்னை பொலிஸார் 2023ஆம் ஆண்டு முதல் சித்திரவதை செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.