ஜெர்மனிய துாதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ரஷ்யா!

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் (St Petersburg) அமைந்துள்ள ஜெர்மன் துணைத் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், செப்டம்பர் 18-க்குள் தூதரகம் தன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஜெர்மனி கடந்த வாரம் தனது நாட்டில் இருந்த இரண்டு ரஷ்ய தூதரகங்களை மூடியதற்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

லீப்ஜிக் வானுார்தி நிலையத்தின் (Leipzig Airport) மீது நடத்தப்பட்ட தோல்வியுற்ற ஆளில்லா வானுார்தி தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என முன்னர் ஜெர்மனி குற்றம் சாட்டியதன் பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் தோன்றியுள்ளது.

இந்தநிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து தூதர்கள் மற்றும் ஊழியர்கள் செப்டம்பர் 18-க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் உள்ள ஜெர்மன் 'கோதே-இன்ஸ்டிடியூட்' (Goethe-Institut) மையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

யுக்ரைன் போர் விவகாரத்தில் ஜெர்மனி , யுக்ரைனுக்கு தொடர்ந்து மிகப்பெரிய அளவில் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருவதால், மொஸ்கோ - பெர்லின் இடையேயான இராஜதந்திர உறவுகள் வரலாறு காணாத அளவுக்கு மோசமடைந்துள்ளன.

Bootstrap