இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் இணையம் வழியாக தனிநபர்களின் ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கு எண்களை பயன்படுத்தி நடந்த பல நிதி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் மோசடி விசாரணைப்பிரிவும் இணைந்து நடத்திய தீவிர சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வாடகை அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கப்பட்ட வெளிநாட்டு வங்கிக்கணக்குகளிலிருந்து, மோசடிக்காரர்கள் பல மில்லியன் ரூபாய் பணத்தை மாற்றியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், தனிநபர்களை இலாபகரமான வணிகங்களுடன் இணைப்பதாகவும், அவற்றிலிருந்து பெறப்படும் பணம் அந்த கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் கூறி, அவர்களின் வங்கிக் கணக்கு எண்களைப் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர், அந்த கணக்குகளில் சிறிதளவு தொகையை வரவு வைப்பதன் மூலம், கணக்கு வைத்திருப்பவரின் நம்பிக்கையை பெற்று கணக்கு வைத்திருப்பவரின் 'பின் எண்' மற்றும் பிற இரகசியத் தகவல்களைத் துல்லியமாகப் பெற்று, கணக்கு வைத்திருப்பவருக்குச் சிறிதும் சந்தேகம் ஏற்படாதவாறு, அந்த கணக்கு எண்களைப் பெரிய அளவிலான நிதிக் குற்றங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

குற்றப்புலனாய்வுத் துறைக்கு இதுபோன்ற சுமார் 500 முறைப்பாடுகள் வந்துள்ளன.

வங்கிக் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பலர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களில் சேருவதற்காக, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, இணைய மோசடியாளர்கள் இந்த நோக்கத்திற்காக மக்களைத் திரட்டி வருவது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியாளர்கள், தாங்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், லாபத்தின் ஒரு பகுதியை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதாகவும் கூறுகின்றனர்.

இறுதியில், அந்த கணக்கு எண்கள் கிரிப்டோகரன்சிகள் மூலம் வெளிநாட்டு கடத்தல்காரர்களின் கைகளுக்கு செல்கின்றன.

கணக்கு வைத்திருப்பவர்கள் தெரிந்தே அல்லது தெரியாமலேயே மோசடிக்கு உடந்தையாகும் பட்சத்தில் அவர்களும் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது.

எனவே ஒருவருக்குச் சொந்தமான எந்தவொரு வங்கிக்கணக்கையும் எந்த வகையிலும் வெளித் தரப்பினருக்கு மாற்றக்கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது.

 

Bootstrap