சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியிலுள்ள நான்கு முக்கிய தளங்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று பாரிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவூதியின் கமிஸ் முஷைத் பகுதியிலுள்ள விமானப்படை தளம், அப்ஹா, நஜ்ரான் மற்றும் ஜஸான் பகுதியிலுள்ள சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதல்களில் எண்ணெய் ஆலைகள் தீப்பிடித்து எரிந்ததோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 73 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஊடகக் கட்டுப்பாடுகள் காரணமாக சேதங்கள் தொடர்பான புகைப்படங்கள் உடனடியாக வெளியாகாத போதிலும், எல்லைப் பகுதியில் சவூதியின் டிரக்குகள் மீதான தாக்குதல் காட்சிகளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.