இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் நிலையில், இந்தப் போர்க்கப்பலின் வருகையும் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நடமாடும் பயிற்சிக் குழுவினரால் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
மேலும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான உதிரிப் பாகங்களையும் INS உதயகிரி கொண்டு வந்துள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை முக்கியஸ்தர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றும் INS உதயகிரி கப்பலில் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு இடையில் தொழில்சார் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கொழும்பில் நடைபெறும் கடற்கரை சுத்தப்படுத்தும் பணியிலும் கப்பல் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
INS உதயகிரி கடந்த 2025 நவம்பர் மாதம் INS விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலுடன் இணைந்து கொழும்புக்கு விஜயம் செய்திருந்ததுடன், SLN IFR-2025 நிகழ்விலும் பங்கேற்றிருந்தது.
மேலும், டித்வா சூறாவளியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளிலும் இந்தப் போர்க்கப்பல் பங்கேற்று, உடனடி நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படைக் கப்பல்களின் இலங்கை விஜயங்கள் “பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்” (MAHASAGAR) என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், “அயல்நாடுகளுக்கு முதலிடம்” (Neighbourhood First) என்ற கொள்கையையும் உறுதிப்படுத்துகின்றன.
இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவும், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.