பயணப் பைக்குள் ராட்சத முதலைத் தலை - இத்தாலி விமான நிலையத்தில் அதிர்ச்சி

இத்தாலியின் டுரின் நகரிலுள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் பயணப் பையில் இருந்து காய்ந்த நிலையில் இருந்த ராட்சத முதலைத் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மியாமியில் இருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலி வந்த பயணியின் உடைமைகளை இத்தாலிய நிதி பொலிஸாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, துணிகளுக்கு நடுவே பரிசுப் பொதியைப் போன்று சுற்றப்பட்ட நிலையில் முதலைத் தலை மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

வனவிலங்கு பாதுகாப்பு விதிகளின்படி, உரிய சர்வதேச அனுமதி மற்றும் சான்றிதழ்கள் இன்றி முதலை உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களை நாடுகளுக்கு இடையே கொண்டு செல்வது சட்டவிரோதமாகும்.

இதையடுத்து முதலைத் தலை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பயணிக்கு 20,000 யூரோ முதல் 200,000 யூரோ வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap