அமெரிக்காவை சுட்டெரிக்கும் வரலாறு காணாத கோடை – உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் தவிப்பு!

அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration - NOAA) தகவலின்படி, நாட்டின் தொடர்ச்சியான 48 மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுவரை பதிவான மிகவும் வெப்பமான ஆகஸ்ட் மாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கடும் வெப்பத்துடன் அமெரிக்காவின் பல பகுதிகளில் வறட்சியும் தீவிரமடைந்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் சுமார் 59 சதவீதப் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாத மழைவீழ்ச்சி வழக்கத்தைவிட 30 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலகளவில் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்திலும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவும் என NOAA கணித்துள்ளது.

Bootstrap