ஈரானின் Pickaxe Mountain பகுதியில் கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கத் தளத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மலையின் கீழ் யுரேனியம் செறிவூட்டும் சென்ட்ரிஃபியூஜ்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவும் இஸ்ரேலும் சந்தேகித்து வரும் நிலையில், அங்கு இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.
ஈரானின் ‘Pickaxe Mountain’ பகுதியில் மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதை சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிப்படுத்தியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த தகவல் தொடர்பில் IAEA இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Pickaxe Mountain தளத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பலமுறை எச்சரித்துள்ளார்.
புதன்கிழமையன்று, அந்த தளத்தில் சில நடவடிக்கைகள் இடம்பெறுவதை அமெரிக்கா கவனித்துள்ளதாகக் கூறிய அவர், ஈரான் “விளையாட வேண்டாம்” என்றும், இல்லையெனில் “மிகக் கடுமையாக தாக்க வேண்டியிருக்கும்” என்றும் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Center for Strategic and International Studies (CSIS) வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்களில், Pickaxe Mountain பகுதியில் கட்டுமான நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.