வலி. வடக்கு காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

வலி. வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களாவுக்கு முன்பாக நேற்று (11) 21ஆவது வாரமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பேணப்பட்டு வருகின்றன.

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், குறித்த பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாததால், அவை தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்படுகின்றன.

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து போராடி வருகின்றனர். எனினும், இதுவரை காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்திருந்தனர்.

அதற்கமைய, நேற்று 21ஆவது வாரமாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Bootstrap