இந்தியாவின் மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்டத்தில் இன்று (12) அதிகாலை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
மிசோரம்–அஸ்ஸாம் எல்லைக்கு அருகிலுள்ள வைரேங்டே நகரில் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவில் சிக்கிய சோடிங்லியானா என்ற 14 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவரது உடல் பொலிஸார் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவர் அஸ்ஸாமின் சில்சார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவர் வைரேங்டே சமூக நல மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. குறித்த வீடுகளில் மொத்தம் 17 உறுப்பினர்களைக் கொண்ட மூன்று குடும்பங்கள் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.