9/11 நினைவு நாளில் ஹம்சா பின் லேடன் காணொளி வெளியீடு

அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அல்-கய்தா அமைப்பு ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.

அல்-கய்தாவின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘அஸ்-சாஹேப்’ ஊடாக வெளியிடப்பட்டுள்ள சுமார் 50 விநாடிகள் கொண்ட காணொளியில், ஹம்சா பின் லேடன் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘செப்டெம்பர் 11 தாக்குதல்களின் கால் நூற்றாண்டு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் காணொளியில், அல்-கய்தாவின் முன்னாள் தலைவர் அய்மான் அல்-சவாஹிரியின் முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளியில் ஒருவர் வெள்ளைத் தலைப்பாகையுடன், கையில் துப்பாக்கியுடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் ஹம்சா பின் லேடனா என்பது இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய நடவடிக்கையில் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள காணொளியில் இருப்பவர் உண்மையில் ஹம்சா பின் லேடனா என்பதை உறுதிப்படுத்துவதற்கான புலனாய்வு நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap