இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் உடலில் காணப்படும் டாட்டூக்கள் (பச்சை குத்தல்), அவரது தனிப்பட்ட வாழ்க்கை, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் கிரிக்கெட் பயணத்தின் முக்கிய தருணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள விராட் கோலி, இந்திய விளையாட்டு வீரர்களிடையே டாட்டூ கலாச்சாரத்தை பிரபலப்படுத்தியவர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறார்.
அவரது ஆரம்பகால டாட்டூக்களில் ஒன்றாக வலது முன்கையில் வரையப்பட்ட பழங்குடியின கலை வடிவிலான டாட்டூ காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஸ்டைலுக்காக வரையப்பட்டதாகக் கூறப்பட்டாலும், பின்னர் அது அவரது ஆக்ரோஷமான குணம் மற்றும் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் அடையாளமாக மாறியுள்ளது.
மேலும், தனது பெற்றோர்களான சரோஜ் மற்றும் பிரேம் ஆகியோரின் பெயர்களை இந்தியில் தனது கையில் டாட்டூவாகப் பொறித்துள்ளார். தனது கிரிக்கெட் பயணத்திற்கு ஆதரவாக இருந்த பெற்றோரின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இந்த டாட்டூக்கள் அமைந்துள்ளன.
கிரிக்கெட் வீரராக நாட்டின் அடையாளத்தைச் சுமப்பதைப் பெருமையாகக் கருதும் கோலி, தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய எண்களையும் உடலில் பொறித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமானதைக் குறிக்கும் வகையில் '175' என்ற எண்ணும், 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதை குறிக்கும் வகையில் '269' என்ற எண்ணும் அவரது உடலில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், கைலாச மலையில் தியானத்தில் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் உருவம், 'ஓம்' குறியீடு உள்ளிட்ட ஆன்மீகத் தொடர்புடைய டாட்டூக்களும் அவரது உடலில் காணப்படுகின்றன. இவை மன அமைதி மற்றும் சுய முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
ஜப்பானிய சாமுராய் வீரரின் உருவம், நேர்மை, ஒழுக்கம், மரியாதை மற்றும் தைரியம் உள்ளிட்ட 'புஷிடோ' கொள்கைகளைக் குறிக்கிறது. தோள்பட்டையில் உள்ள 'கடவுளின் கண்' டாட்டூ, தன்னை விட உயர்ந்த சக்தி ஒன்று இருப்பதை நினைவூட்டுவதுடன், பணிவுடன் இருக்க வேண்டும் என்பதையும் பிரதிபலிக்கிறது.
அண்மையில் வரையப்பட்டதாகக் கூறப்படும் தாமரை மலர் மற்றும் புனித வடிவியல் டாட்டூக்கள், சவால்களை எதிர்கொண்டு மீள்வது, மறுபிறப்பு மற்றும் ஆன்மீக முதிர்ச்சி போன்ற கருத்துகளை வெளிப்படுத்துகின்றன.
இதனால், விராட் கோலியின் உடலில் இடம்பெற்றுள்ள டாட்டூக்கள் வெறும் அலங்காரத்திற்கானவை அல்ல என்பதுடன், அவரது கிரிக்கெட் பயணம், குடும்பப் பாசம், நம்பிக்கைகள் மற்றும் வாழ்க்கையில் அவர் கடந்து வந்த முக்கியமான கட்டங்களை வெளிப்படுத்தும் அடையாளங்களாக அமைந்துள்ளன.