உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் கருணை காட்டாது அனைவருமே கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கங்களாக இருக்கவில்லை.
ஊழல் நிறைந்த அந்த அரசாங்கங்கள் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளையே பாதுகாத்தன.
நாட்டில் வேரூன்றி இருக்கும் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தின் முழுமையாக இல்லாதொழிப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய பணி.
இந்தக் குற்றங்களோடு தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் இரக்கம் காட்டப்படமாட்டாது.
தங்களுக்கு எதிராக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதற்காக, தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
தமக்கு எதிரான செய்தியை எழுதியதற்காக துப்பாக்கியால் ஊடகவியலாளர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
வாக்குகளைப்பெற்று, ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டில் பாரிய குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் இருக்கின்றார்கள். இந்தக் குற்றங்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டப்படமாட்டாது.
இத்தகைய குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்குதே தேசிய மக்கள் சக்தியின் பணி. அதனை நாங்கள் சரியாக செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.