அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும் நோக்கில் கனடாவை அதன் 'இணை உறுப்பினராக' மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி ஆராய்ந்து வருகின்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்துடனான வர்த்தகத் தகராறு மற்றும் பரஸ்பர வரிகள் காரணமாகக் கனடாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனது வர்த்தகப் பங்காளிகளை வேறுபடுத்தும் முயற்சியில் கனடா தீவிரமாக இறங்கியுள்ளது.
கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய கனிமங்கள் சார்ந்த பொருட்கள், சேவைகள் மற்றும் தொழிலாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், கனடியக் குடிமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விசா அற்ற வேலை வாய்ப்பு மற்றும் வசிப்பிட உரிமைகளைப் பெற்றுத் தருவது தொடர்பாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் கார்னி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இருப்பினும், புதிய 'இணை உறுப்பினர்' அந்தஸ்தை உருவாக்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டிய போதிலும், உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் இத்திட்டத்திற்குப் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.