தெற்குலகில் ஒருங்கிணைந்த பெரும் சந்தையை உருவாக்க வேண்டும் – சீன ஜனாதிபதி

தெற்குலகில் வளரும் பொருளாதார நாடுகளை ஒருங்கிணைத்து, பெரிய சந்தையை உருவாக்கும் வகையில் பிரிக்ஸ் அமைப்பு செயல்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வில் உரையாற்றிய அவர், வர்த்தகம், உற்பத்தி, முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட 5 அம்ச செயல்திட்டத்தை முன்வைத்தார். இதன் கீழ், அனைவரும் அணுகக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் சீனா தலைமை வகிக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

சர்வதேச விதிமுறைகள் அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் எனக் குறிப்பிட்ட ஷி ஜின்பிங், சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை சமத்துவம், உள்விவகாரங்களில் தலையிடாமை மற்றும் மோதல்களுக்கு அமைதியான தீர்வு ஆகியவற்றை உறுதி செய்ய தெற்குலக நாடுகள் கூட்டாகச் செயல்பட வேண்டும் என்றார்.

தெற்குலக நாடுகளுடன் சீனா கொண்டுள்ள நெருங்கிய உறவுகளைப் பயன்படுத்தி விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதுடன், ஒருங்கிணைந்த பெரிய சந்தையை உருவாக்க பிரிக்ஸ் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகக் கப்பல்கள் மற்றும் கடல்சார் வர்த்தகத்துக்காக புதிய காப்பீட்டு முறையை உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் முன்மொழிந்தார். தானிய வர்த்தகத்துக்கான கூட்டு முன்னெடுப்பும் அவசியம் என அவர் தெரிவித்தார்.

வெளிப்புற அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு மூலதனம், தொழிலாளர் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சுதந்திரமான வழிமுறைகளை பிரிக்ஸ் நாடுகள் உருவாக்க வேண்டும் என்றும் புட்டின் கூறினார்.

மறுபுறம், நாடுகள் மீது தன்னிச்சையாக விதிக்கப்படும் தடைகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வை நேரடியாகப் பாதிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்தார். பிரிக்ஸ் நாடுகள் உள்நாட்டு நாணய அடிப்படையிலான வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், காஸா மற்றும் லெபனான் மக்கள் இனப்படுகொலையின் விளைவுகளை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட பெசஷ்கியான், அந்தப் பகுதிகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் பிரிக்ஸ் நாடுகள் திறம்பட பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Bootstrap