மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் – எண்ணெய் விநியோகத்துக்கு புதிய அச்சுறுத்தல்

மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் இடம்பெறும் தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.

ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (14) நடைபெறவிருந்த நிலையில், ஒருமித்த கருத்தை எட்டும் நோக்கில் அது ஒத்திவைக்கப்பட்டதாக ஓமான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் பத்ர் அல்-புசைதி தெரிவித்துள்ளார்.

ஓமான் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த இந்தச் சந்திப்பில் வளைகுடா அரபு நாடுகளுடன் ஈரானும் பங்கேற்கவிருந்தது. ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஈரான் முன்வைக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த சவூதி அரேபியாவின் சுமார் 1,200 கிலோமீற்றர் நீளமான கிழக்கு - மேற்கு எண்ணெய் குழாய் வார இறுதி முழுவதும் மூடப்பட்டிருந்தது. ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து மத்திய கிழக்கு எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய பாதையாக இந்தக் குழாய் விளங்குகின்றது.

சவூதி அரேபியாவின் செங்கடல் துறைமுகமான யன்புவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய் மூலம், குழாய் தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் சுமார் 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே ஏற்றுமதியைத் தொடர முடியும் என வர்த்தகர்கள் மற்றும் சவூதி எண்ணெய் வாங்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதம் வரை பாதிக்கப்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை உலக சந்தையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையிலும் பதற்றம் தொடர்கின்றது. நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்று ஏவுகணை அல்லது எறிகணை தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பற்றியதாக பிரித்தானிய கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் கப்பலில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மற்றொரு சம்பவத்தில் ஈரான் கடற்பரப்புக்கு அருகே வர்த்தகக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில், சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் டீசல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, ஒரு கேலனுக்கு 6.20 டொலருக்கும் அதிகமாகியுள்ளது.

மறுபுறம், யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர்களின் தாக்குதல்களும் தொடர்கின்றன. சவூதியின் ஜசான் மாகாணத்தில் வீடுகள் மற்றும் பள்ளிவாசல் சேதமடைந்த காட்சிகளை சவுதி அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. செங்கடலுக்கான நுழைவாயிலான பாப் அல்-மந்தப் நீரிணைக்கு அருகிலுள்ள பெரிம் தீவை கைப்பற்றியதாக ஹூதி அமைப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹூதி அமைப்பினர்களின் நடவடிக்கைகள் சவூதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் புதிய பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளன. சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஹூதி அமைப்பினர்களை எதிர்கொள்ள இராணுவ உதவி கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்கா தற்போது புலனாய்வுத் தகவல் உதவியை மட்டுமே வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஓமானுடன் எந்தவொரு உடன்பாடும் எட்டப்பட்டாலும், அமெரிக்கா தமது கோரிக்கைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(AI ஆல் உருவாக்கப்பட்ட படம்)

Bootstrap