செயற்கை நுண்ணறிவு (AI) போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே உலகளவில் வெற்றியாளர்களாக இருப்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு ஓபன் ஏஐ, எக்ஸ் ஏஐ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எனினும், இதற்கு மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ள ட்ரம்ப், அயர்லாந்து பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், செய்யறிவால் ஏற்படக்கூடிய அபாயங்களை தாம் குறைத்து மதிப்பிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
செய்யறிவுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர், அதேவேளை தேவையற்ற எதிர்மறையான கருத்துகளை முன்வைத்து, நடைமுறைக்கு வர வாய்ப்பில்லாத விடயங்களைப் பற்றி பேசுபவர்களும் உள்ளதாகத் தெரிவித்தார்.
செய்யறிவானது தீமைகளைவிட அதிக நன்மைகளையே வழங்கும் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், சீனாவை விட அமெரிக்கா செய்யறிவு துறையில் முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், செய்யறிவு வளர்ச்சியை தற்போதைய வேகத்திலேயே தொடர விரும்புவதாகவும், அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே வெற்றியாளர்களாவார்கள்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் ட்ரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவகாரமும் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.