எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ள பனாமா கால்வாய் கப்பல் போக்குவரத்தை மேலும் குறைக்க பனாமா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மேல்பரப்பு நீர் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பமடைவதால் ஏற்படும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக மத்திய அமெரிக்காவில் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பனாமா கால்வாயின் செயற்பாடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தில் சுமார் 5 சதவீதம் பனாமா கால்வாய் வழியாக நடைபெறுகிறது. கால்வாயில் கப்பல்களை மேலே உயர்த்தவும் கீழே இறக்கவும் பயன்படுத்தப்படும் நீர்மடைகளை இயக்க அதிகளவு நீர் தேவைப்படுகிறது. போதிய நீர் இல்லாத நிலையில் கால்வாயின் வழக்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பது சிரமமாகியுள்ளது.
இதன் காரணமாக, நீரைச் சேமிக்கும் நோக்கில் செப்டெம்பர் 4ஆம் திகதி முதல் பனாமா கால்வாயில் நாளொன்றுக்கு அனுமதிக்கப்படும் கப்பல்களின் எண்ணிக்கை 36இலிருந்து 32ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாளொன்றுக்கு சராசரியாக 29.5 கப்பல்களாக மேலும் குறைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் பனாமா கால்வாய் பாதுகாப்பாகவும், தொடர்ச்சியாகவும், இலாபகரமாகவும் இயங்குவதை உறுதி செய்ய முடியும் என பனாமா கால்வாய் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோஸ் ரமோன் யகாசா தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டிலும் எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து நாளொன்றுக்கு 38இலிருந்து 22ஆக குறைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று கடல்வழியாக பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தற்போது கால்வாயில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறை நிலைமை உலகளாவிய வர்த்தகத்துக்கும் புதிய சவாலாக மாறியுள்ளது.