முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் இருவர், 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் ஏ.தர்ஷினி முன்னிலையில் நேற்று (15) காணொளி தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலரின் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் மற்றும் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இன்றைய விசாரணையின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இதன்போது பிள்ளையானின் சட்டத்தரணி, சிறைச்சாலையில் அவருக்கு வழங்கப்படும் உணவு தொடர்பிலும், அவரது தாயாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பில் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் மற்றுமொரு சந்தேகநபர் லண்டனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு உதவுமாறு இன்டர்போலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.