இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்தி ஒன்றை, வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
மெக்காவுக்கு தெற்கே வைத்து, தடைசெய்யப்பட்ட வான்பரப்பிற்குள் நுழைவதற்கு முன்னரே குறித்த ஆளில்லா வானூர்தி வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
மெக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தங்களுக்குச் சிவப்புக் கோடு என கூட்டுப் படை எச்சரித்துள்ளது.
அத்துடன், இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.