500,000 போலி Gmail கணக்குகள் மூலம் குண்டு மிரட்டல்கள்: Googleஐ விசாரிக்கவிருக்கும் இந்தியக் காவல்துறை

இந்தியாவில் போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்ப 500,000க்கும் அதிகமான Gmail மின்னஞ்சல் கணக்குகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்பில் Google நிறுவனத்தை இந்தியக் காவல்துறை விசாரிக்கவிருக்கிறது.

குஜராத் காவல்துறை இந்த வாரம் மின்னஞ்சல் கட்டமைப்பு ஒன்றை முறியடித்து இருவரைக் கைது செய்தது.

அதிரடி நடவடிக்கையில் 513,847 Gmail கணக்குகளும் அவற்றின் கடவுச்சொற்களும் தெரியவந்தன. அவை 2022ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படுகின்றன.

இதுவரை காணாத அளவு போலி Gmail கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக குஜராத் இணையக் குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம் (Reuters) தெரிவித்தார்.

பாதுகாப்பு அம்சங்களை மீறி இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுக்க கொள்கைகளை மாற்றும்படி Googleஐக் கேட்டுக்கொள்ளவிருப்பதாக அதிகாரி கூறினார்.

செப்டம்பர் 10ஆம் தேதி குஜராத் அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. அந்த மிரட்டல் பொய்யானது என்பது பின்னர் தெரியவந்தது.

 

Bootstrap