வலி. வடக்கு பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளனர்.
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (17) சபா மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில், கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தவிசாளர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வை புறக்கணித்தனர்.
இதனிடையே, தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை சபா மண்டபத்திற்குள் நடத்தாமல், பிரதேச சபை வளாகத்திற்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கலந்துகொள்ளுமாறு பிரதேச சபையின் தவிசாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், தவிசாளர் சபை அமர்வை புறக்கணித்ததுடன், பிரதேச சபைக்கு வெளியே நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவருடன் இணைந்து தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணித்துள்ளனர்.
இதனையடுத்து, பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதேச சபை வளாகத்தினுள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.