இளவரசி டயானா... இந்தப் பெயரை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் மறந்திருக்காது. தனது கருணை பொங்கிய செயல்களாலும், மக்களோடு மக்களாக கலந்து பழகிய பண்பாலும், விழிப்புணர்வு செயல்களுக்காகவும் மட்டுமின்றி, தனது அன்பான அணுகுமுறையால், உலக மக்களின் மனதை வென்றவர் இளவரசி டயானா. பிரிட்டன் இளவரசராக இருந்த சார்லஸை தனது 20-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டு பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்த டயானா, பின்னர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று அரச குடும்பத்தைவிட்டு வெளியேறினார். அவரின் உடைகள், அவரது ஒவ்வோர் அசைவுகளும் பாப்பரசிகளால் படம்பிடிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இறுதிநொடிவரை அவர் விரட்டிவிரட்டி படம்பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
1997-ஆம் ஆண்டு பாரிஸில் டயானா தனது ஆண் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது பாப்பரசிகள் படம்பிடிக்க விரட்டியநிலையில், கார் விபத்தில் தனது 36-ஆவது வயதில் டயானா உயிரிழந்தார். அவரது மரணம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் அதிகாரபூர்வ விசாரணைகளில் நிரூபிக்கப்படவில்லை.
இந்த நிலையில்,டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர் எழுதியுள்ள Swan Song: Diana, My Sister என்ற நினைவுக் குறிப்புப் புத்தகம் செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் புத்தகத்தில், டயானாவின் வாழ்க்கை மற்றும் அவரது மரணத்துக்குப் பிறகு நடந்த சம்பவங்களை, அவரது சகோதரர் என்ற முறையில் சார்லஸ் ஸ்பென்சர் பதிவு செய்துள்ளார். இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், டயானாவின் இறுதிச்சடங்கு தொடர்பாக அப்போதைய இளவரசர் சார்லஸுக்கும், சார்லஸ் ஸ்பென்சருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டயானாவின் இறுதி ஊர்வலத்தில் அவரது மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி நடந்து செல்ல வேண்டும் என அரண்மனை தரப்பில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு துயரமான சூழ்நிலையை வில்லியமும் ஹாரியும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதே தனது கருத்தாக இருந்ததாகவும் இதுதொடர்பாக அப்போது இளவரசராக இருந்த சார்லஸுடன் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதத்தின்போது, “Rest assured, we’ll forget her soon enough” என்று அவர் கூறியதாக சார்லஸ் ஸ்பென்சர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் தாம் அதிர்ச்சியடைந்ததாகவும், “நீங்கள் இப்போதுதான் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று கூறிவிட்டு அந்தத் தொலைபேசி அழைப்பைத் துண்டித்ததாகவும் அந்த வார்த்தைகள் டயானா மீது சார்லஸுக்கு இருந்ததாக தாம் கருதும் மனக்கசப்பை வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, டயானா உயிரிழந்த இரவு சார்லஸ் தன்னிடம் தொலைபேசியில் பேசியபோது, சார்லஸ் “Lottery winner” போல உற்சாகமாக இருந்ததாக ஸ்பென்சர் தனது நினைவுகளைப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்தக் கருத்துகள் வெளியாகியிருப்பது பிரிட்டிஷ் அரச குடும்பத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு அரண்மனை சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “புத்தகங்கள் குறித்து பொதுவாக நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ள அரண்மனை, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சகோதரரின் துயரம், ஒருவரின் நினைவையும், முடிவெடுக்கும் திறனையும், சம்பவங்களை நினைவுகூரும் விதத்தையும் பாதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. டயானாவின் மரணத்துக்குப் பிறகு, அவரது குடும்பத்தினருக்கும் பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் குறித்து ஏற்கெனவே விவாதங்கள் இருந்து வரும் நிலையில், தற்போது சார்லஸ் ஸ்பென்சரின் புதிய புத்தகம் அந்தப் பழைய சம்பவங்களை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.