அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பொதுமக்களின் வசதிக்காக 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 அதிநவீன இலவச பொதுக் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் எளிதாகக் கண்டறியும் வகையில் பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் உள்ளே சென்றதும் ‘கவுண்ட் டவுன்’ நேரக் கணிப்பு தொடங்குகிறது:
5-வது நிமிடம்: முதல் ஆடியோ எச்சரிக்கை ஒலிக்கும்.
8-வது நிமிடம்: இரண்டாவது எச்சரிக்கை ஒலிக்கும்.
10-வது நிமிடம்: இறுதிக் கட்ட எச்சரிக்கை ஒலித்து, சில வினாடிகளில் கதவு தானாகவே திறந்துவிடும்.
இத்திட்டம் குறித்து நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி கூறுகையில், "கழிப்பறை என்பது அனைவரும் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசிய இடம்; அங்கு அமர்ந்து கைபேசியில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவே இந்தத் தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.
இத்திட்டத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு நபர் சராசரியாக 3.5 நிமிடங்கள் மட்டுமே கழிப்பறையைப் பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. எனவே 10 நிமிடங்கள் போதுமானது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நவீன முயற்சிக்கு நியூயோர்க் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.