ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் நாட்டு ஹவுதிக்கள் - சவுதி அரேபியா இடையே நடந்துவரும் தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சவுதியின் பல பகுதிகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்கு அருகில் கூட அண்மையில் ஹவுதி படை தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால், அதனை அருவருக்கத்தக்க பொய் எனக்கூறி ஹவுதி படை மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், முதல்முறையாக சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் ஹவுதி படை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ரியாத்தில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே எரிபொருள் கிடங்குகளில் ஹவுதி படை தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து சவுதியின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தாக்குதலை ஒப்புக்கொண்ட ஹவுதி படை, பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள், ட்ரோன்களைக் கொண்டு தாக்கியதாகவும், ஏமன் தலைநகர் சனாவைக் குறிவைத்து சவுதி படை தாக்கியதற்கு பதிலடியாகவே அவர்களின் தலைநகரம் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், ஆசிய நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல், தாக்குதல் காரணமாக திடீர் விமான ரத்து, வான்வெளி மூடல் மற்றும் பிற இடையூறுகளுக்கு அமெரிக்கர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும், மிகுந்த கவனத்துடன் இவற்றை அறிந்துவைத்திருக்க வேண்டும் எனவும் தனது மக்களுக்கு கேட்டுக் கொண்டுள்ளது. தாய்லாந்து கம்போடியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கவனமாக இருக்க வேண்டும் என லெவல் - 2 எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்கா, அந்த நாடுகளின் எல்லைகளுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்திருந்தது. சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்வதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என லெவல் 3 எச்சரிக்கையும், ஏமன் எல்லைப் பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம் என கடந்த 16 ஆம் தேதி லெவல் 4 எச்சரிக்கையும் விடுத்திருந்தது. அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் தலைநகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா, ஏமன் நாடுகளை விட்டு அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் எனவும், பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தூதரகங்கள் ஒரே நேரத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தாக்குதல் குறித்த தகவல்கள் அமெரிக்க உளவுத் துறைக்கு முன்பே கிடைத்திருக்கலாம் எனவும், அதன் காரணமாகவே தன் மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை கொடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், இது அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை மட்டுமில்லை என்பது மட்டும் தெளிவாக புலப்படுகிறது.