கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதலால் வளைகுடா பகுதியில் தொடங்கிய போர், சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இடையேயான தீவிர மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச்சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இது ’மெக்கா ஒப்பந்தம்’ (Mecca Pact) எனப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். மற்ற இரு நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் அந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும்.
இதற்கிடையில், சவூதி அரேபியா மீது தொடர்சியான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை ஹவுதி மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 16-ம் தேதி இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவையும் ஹவுதிகள் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாகவும், அதனை தங்கள் நாட்டு வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்தச் சூழலில் தான், சவூதி அரேபியாவைப் பாதுகாப்பதற்காகத் தேவையான எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, “ஒருவேளை மெக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை. மெக்கா ஒப்பந்தம் எங்களுக்கும் பொருந்தும் அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம்” என பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் (Khawaja Asif) தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, துருக்கியும் சவுதிக்கு தேவையான ராணுவ உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகன் ஃபிதான் (Hakan Fidan), சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமாக இருப்பதாகவும், ஒப்பந்தத்தின் கீழ் சவுதிக்கு தேவையான தொழில்நுட்ப ராணுவ உதவிகளை வழங்க துருக்கி தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான், பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் ராணுவ ரீதியாக சவூதிக்கு ஆதரவளித்தால், தங்கள் அமைப்பு ”இரும்புக் கரம்” கொண்டு பதிலடி கொடுக்கும் என ஹவுதிக்கள் எச்சரித்துள்ளனர். அதேசமயம், பாகிஸ்தான் மற்றும் துருக்கி மக்களிடையே ஏமன் மக்களின் நிலைமைக்கு ஆதரவு இருப்பதாகவும் கூறியிருக்கும் ஹவுதி அதிகாரிகள், இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் நடுநிலை வகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே, மத்திய கிழக்குப் பகுதியில் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் துருக்கியை ஹவுதி படையினர் எச்சரித்திருப்பது போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேசமயம், மெக்கா ஒப்பந்தத்தை பின்பற்றுமா? அல்லது இருநாடுகளும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இறங்குமா? என்பதை பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.