விண்வெளியிலும் குப்பை பிரச்சினை: பூமியின் சுற்றுப்பாதையை சுத்தம் செய்யும் முயற்சியில் உலக நாடுகள்!

பூமிக்கு மேலே நம்மால் பார்க்க முடியாத ஒரு மிகப்பெரிய பிரச்சினை உருவாகிக் கொண்டிருக்கிறது! அது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் குப்பைகள் என எச்சரிக்கப்படுகிறது.

செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட் பாகங்கள், சிறிய உலோகத் துண்டுகள், பெயிண்ட் துகள்கள் என பூமியைச் சுற்றி ஏராளமான பொருட்கள் வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இவை எதிர்காலத்தில் விண்வெளிப் பயணங்களுக்கே மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்தக் குப்பைகளை எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Low Earth Orbit என்று அழைக்கப்படும் பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் அதிக குப்பைகள் உருவாகியுள்ளது. Space Debris Foundation அளித்த தகவல்படி, 10 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் பூமியைச் சுற்றி வருகின்றன.

அதுமட்டுமல்ல 1 முதல் 10 சென்டிமீட்டர் அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமான துண்டுகளும் அதைவிட சிறிய அளவில் பல கோடி துகள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இதில் இறந்துபோன செயற்கைக்கோள்கள், பழைய ராக்கெட் பாகங்கள் மட்டுமல்ல.. விண்கலங்களில் இருந்து பிரிந்த மிகச்சிறிய பெயிண்ட் துகள்கள்கூட இருக்கின்றன.

விண்வெளியில் இந்தச் சிறிய துண்டுகள் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனென்றால் அவை மிக அதிக வேகத்தில் பயணிக்கின்றன.

ஒரு சிறிய உலோகத் துண்டு கூட ஒரு செயற்கை கோள் மீது மோதினால், மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வகங்கள், ஹோட்டல்கள், டேட்டா சென்டர்கள் மட்டுமல்லாமல், நிலவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி திட்டங்கள்கூட பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விண்வெளி மிகப்பெரியது என்பதால், அங்கு விடப்படும் பொருட்கள் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தாது என்ற எண்ணம் ஆரம்ப காலத்தில் இருந்தது. மேலும், அப்போது செயலிழந்த செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையிலிருந்து அகற்றுவதற்கான தொழில்நுட்பமும் போதுமான அளவில் இல்லை. இதனால் பல ஆண்டுகளாக குப்பைகள் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன.

2009-ல் நடந்த ஒரு சம்பவம் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உலகிற்கு உணர்த்தியது. ஒரு செயலிழந்த ரஷ்ய ராணுவ செயற்கைக்கோள், செயல்பாட்டில் இருந்த அமெரிக்க தகவல் தொடர்பு செயற்கைக்கோளை மணிக்கு சுமார் 42 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் மோதியது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கான புதிய துண்டுகள் உருவாகின.

இந்நிலையில் தற்போது இந்தக் குப்பைகளை அகற்ற இதற்காகவே புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ரோபோ கரங்கள்.. வலைகள்.. ஹார்பூன் அமைப்புகள்.. காந்தத் தகடுகள்.. Docking அமைப்புகள்.. (robotic arms and claws, net and harpoon systems, magnetic and docking plates) என பல்வேறு முறைகளில் விண்வெளிக் குப்பைகளைப் பிடித்து அகற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

சில நிறுவனங்கள் விண்வெளியில் குப்பைகளைத் தேடி, அவற்றுடன் இணைந்து, பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் இழுத்து வரக்கூடிய தொழில்நுட்பங்களையும் உருவாக்குகின்றன.

TransAstra நிறுவனம் உருவாக்கிய CaptureBag என்ற inflatable பை போன்ற அமைப்பு, விண்வெளியில் பெரிய அளவில் விரிவடைந்து குப்பைகளைப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோதனையில் இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பேருந்து அளவிலான விண்வெளிக் குப்பைகளைக்கூட பிடிக்கக்கூடிய தொழில்நுட்பமாக இது உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவும் இந்தப் பிரச்சினையை சமாளிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ISRO-வின் Project NETRA, விண்வெளியில் உள்ள பெரிய பொருட்களை கண்காணித்து, அவை இந்திய செயற்கைக்கோள்களுடன் மோதும் அபாயத்தை கணக்கிட உதவுகிறது.

அதேபோல், SpaDeX திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள்களை துல்லியமாக ஒன்றுடன் ஒன்று இணைக்கும் docking தொழில்நுட்பம் சோதிக்கப்பட்டு வருகிறது.

விண்வெளிக் குப்பையை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒரு குப்பையைத் தேட வேண்டும்.. அதன் சுற்றுப்பாதையை கணக்கிட வேண்டும்.. அதனுடன் பாதுகாப்பாக இணைக்க வேண்டும்.. பின்னர் அதை கட்டுப்படுத்தி பூமியின் வளிமண்டலத்துக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கான செலவு மிக அதிகம்.

உதாரணமாக, ESA மற்றும் ClearSpace இணைந்து மேற்கொள்ளும் ஒரு திட்டத்தில் ஒரே ஒரு செயலிழந்த ராக்கெட் பாகத்தை அகற்றுவதற்கே சுமார் 86 மில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விண்வெளியிலும் இடம் குறைந்து வருகிறது. செயற்கைக்கோள்கள் அதிகரிக்கின்றன... விண்வெளிப் பயணங்கள் அதிகரிக்கின்றன... அதே நேரத்தில் குப்பைகளும் அதிகரிக்கின்றன. விண்வெளியை பயன்படுத்துவதற்கான சர்வதேச விதிமுறைகள், குப்பைகளை அகற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை மீண்டும் பயன்படுத்தும் நடைமுறைகள் ஆகியவை இனி மிகவும் முக்கியமாகப் போகிறது.

Bootstrap