ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களை 'துஜுவான்' (Dujuan) எனப்படும் பேரழிவுச் சூறாவளி தாக்கி வருவதால், வரலாறு காணாத பலத்த மழை மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புயலின் சீற்றத்தைக் கருத்தில் கொண்டு, 6 மாகாணங்களைச் சேர்ந்த 1.9 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 50,000க்கும் அதிகமான வீடுகள் மின்சார வசதியை இழந்துள்ளன.
கனகாவா மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிருடன் புதையுண்டிருக்கலாம் எனத் தீயணைப்புப் படையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சிபா பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பேரழிவு காரணமாகச் சுமார் 300 வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல முக்கிய தொடருந்து சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது டோக்கியோவை அச்சுறுத்தி வரும் துஜுவான் புயல் மணித்தியாலத்துக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் தொடர்ச்சியான பலத்த காற்றையும், மணிக்கு 194 கிலோமீற்றர் வேகத்திலான சுழல் காற்றையும் வீசி வருகிறது.
பசுபிக் சமுத்திரத்தில் நிலவும் "சுப்பர் எல் நினோ" காலநிலை மாற்றத்தால் சமுத்திர நீர் வெப்பமடைந்து வருவதே இவ்வாறான சக்திவாய்ந்த புயல்கள் உருவாகக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.