ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினின் 'ஐக்கிய ரஷ்யா' கட்சி 355 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தாலும், யாரும் கணிக்க முடியாத அளவுக்கு ரஷ்ய அரசியலில் புதினின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையான 'ஸ்டேட் டுமா' (State Duma) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. உக்ரைன் போருக்குப் பிந்தைய முதல் தேர்தல் என்பதால் உலக நாடுகள் மத்தியில்த் தீவிர எதிர்பார்ப்பு காணப்பட்டது. மொத்தமுள்ள 450 இடங்களில் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சி 355 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி 326 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் வெற்றிக்கு மத்தியில், புதின் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. உக்ரைன் போருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டனர். மிதவாதக் கொள்கை கொண்ட 'யாப்லோகோ' கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் தங்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம் என்ற அச்சத்துடனேயே களமிறங்கினர். ரஷ்ய-உக்ரைன் போர் குறித்துக் கருத்து தெரிவித்த அக்கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், யாப்லோகோ கட்சியின் தலைவர் நிகோலாய் ரைபகோவ் தனது வாக்குச் சீட்டில் கட்சியின் பெயரையும் "அமைதிக்காக" என்ற முழக்கத்தையும் எழுதித் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தர். வெளிப்படையாகத் தனது வாக்கையும் செல்லாததாக்கினார். அதேவேளையில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய அரசியலில் தொடர்ந்து தனது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு வரும் ரஷ்யக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சி (CPRF), தற்போதும் இரண்டாவது பெரிய கட்சியாகத் தொடர்கிறது.