மருத்துவ உலகின் மாபெரும் அதிசயம்... 271 நாட்கள் பன்றி சிறுநீரகத்துடன் வாழ்ந்து சாதனை படைத்த நபர்!

இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான ஒருவர், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பயன்படுத்தி, டயாலிசிஸ் சிகிச்சை இன்றி 271 நாட்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல... 271 நாட்கள் கழித்து, தற்போது வெற்றிகரமாக மனித உறுப்பை பெற்றுவிட்டார் அவர். மனித உறுப்பு கிடைக்கும் வரை, தற்காலிகமாகவே அவர் இந்த பன்றி உறுப்பை பெற்றிருந்திருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘உறுப்பு செயலிழப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மனித உறுப்பு தானமாக கிடைக்கும் வரையில் விலங்குகளின் உறுப்புகளைப் பயன்படுத்தலாம்’ என்பதை, ஆண்ட்ரூஸின் இந்த சிகிச்சை உணர்த்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தி லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, உயிருள்ள ஒரு நோயாளியின் ‘மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை’க்கு ஒரு விலங்கின் உறுப்பு பயன்படுத்தப்பட்டு, அது நீண்டகாலம் வெற்றியும் அடைந்துள்ளது இதுவே முதன்முறை. மருத்துவ உலகம் கண்டுள்ள இந்த வெற்றியானது, உலகெங்கிலும் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருப்போர் பட்டியலில் சிக்கித் தவிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த டிம் ஆண்ட்ரூஸ் என்ற 66 வயது நபர்தான் இந்த சிகிச்சையை பெற்றவர். இவரின் உடலில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தில் மேற்கொண்டு வைரஸ் தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இவரின் நோயெதிர்ப்பு மண்டல நிராகரிப்பை தடுக்கவும்தான் மருத்துவர்கள் இந்த சிகிச்சையை செய்துள்ளனர்.

Bootstrap