ரூ.46 கோடி பண மோசடி: தனது சகோதரி அம்பிகா மீது ராதா பரபரப்பு புகார்!

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா. சகோதரிகளான இருவரும் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தனர்.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை வழங்கிய ராதா மற்றும் அம்பிகா, 80-களின் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகைகளாக இருந்தனர்.

குறிப்பாக, இருவரும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்ததால், அப்போது ரசிகர்கள் மத்தியில் இந்த சகோதரிகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

திரையுலகில் இருந்து ஓரளவு விலகிய பின்னரும், ராதா தொடர்ந்து ஊடகங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி வருகிறார். குறிப்பாக, பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

மறுபுறம், அம்பிகாவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். இருவரும் சகோதரிகள் என்ற முறையில் நீண்ட காலமாக ஒன்றாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகை ராதா இன்று காலை தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ரூ.46 கோடி பணம் தொடர்பாக காசோலை மூலம் மோசடி நடைபெற்றதாக ராதா குற்றம்சாட்டியுள்ளார்.

தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவரே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக திரையுலகில் சகோதரிகளாக இணைந்து பயணித்த ராதா மற்றும் அம்பிகா இடையிலான இந்த விவகாரம் தற்போது காவல்துறை புகார் வரை சென்றிருப்பது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்களும், மறுபுறம் அம்பிகா மற்றும் அவரது சகோதரரின் விளக்கமும் வெளியாகிய பின்னரே குறித்த விவகாரத்தின் முழு பின்னணி குறித்து தெளிவாகத் தெரியவரும்.

Bootstrap