கனடாவில் சட்டவிரோதமாக மீன் பிடித்த நபர்: நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச தண்டனை

கனடாவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபருக்கு சுமார் 4,500 கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்ற நபர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 4,500 கனேடிய டொலர் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் 5 ஆண்டுகளுக்கு ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பால் ஹர்டில் மீது அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலையை பயன்படுத்தி 'ரெயின்போ டிரவுட்' மீன்களைப் பிடித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இயற்கை வள பாதுகாப்பு அதிகாரியிடம் தவறான வாக்குமூலம் அளித்தது என 3 குற்றச்சாட்டுகள் பால் ஹர்டில் மீது சுமத்தப்பட்டுள்ளது.

சூனியா நகராட்சியின் இஷ்கிபிபிள் க்ரீக் பகுதியில் மே 1ம் திகதி 2025ம் ஆண்டு சந்தேக நபர் சட்டவிரோதமாக மீன்பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை 11/17 இல் சந்தேக நபரான பால் ஹர்டிலின் வாகனத்தை சோதனையிட்ட போது, அவர் டிப் நெட் வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பான விசாரணையின் போது அதிகாரியிடம் பொய்யான தகவல்களை வழங்கி தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை திசைதிருப்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டர்பே ஒன்ராறியோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இலையுதிர் காலத்தில் சால்மன் மீன்களின் இடப்பெயர்வு காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அனைத்து மீனவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரி ரொன் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

Bootstrap