யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு புதிய நிதியம்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகித்து முகாமைத்துவம் செய்வதற்காக 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி நிதியம் ஒன்று முறையாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த மையத்தின் நிர்வாக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் அதேசமயம் ஸ்திரமான நடவடிக்கைகளுக்கான நிதி சுதந்திரத்தை வழங்கவும் குறித்த நிதியமானது ஓர் இடைக்கால நிர்வாக அமைப்பாக செயற்படும்.

குறித்த நிதியமானது யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர், யாழ் மாநகர சபை மேயர், வட மாகாண நிர்வாக அமைச்சர் (அல்லது நியமனதாரர்), புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகிய நான்கு பதவிவழி உறுப்பினர்களையும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலை, கலாசாரம், கல்வி, சட்டம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 5 மாண்புமிக்க நிபுணர்களையும் அங்கத்தவர்களாக கொண்டுள்ளது.

இந்த மையமானது இந்திய அரசாங்கத்தின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் ஊடாக அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதே வேளை, இரு மாடிகளை கொண்ட நூதனசாலை, 600க்கும் அதிகமான இருக்கைகளைக் கொண்ட தியேட்டர் வடிவிலான கேட்போர் கூடம், 11 மாடிகளை கொண்ட கற்றல் நிலையம், பொது திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இந்த பண்பாட்டு மையத்துக்கான அடிக்கல் 2015 மார்ச்சில் மாண்புமிகு இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவரால் நாட்டப்பட்டது.

இப்பண்பாட்டு மையம் 2022 மார்ச் திறந்து வைக்கப்பட்ட அதேவேளை 2023 பெப்ரவரி இலங்கை மக்களின் பாவனைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில் 2026 செப்டம்பர் 18 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதியம், இப்பண்பாட்டு மையம் யாழ் மாநகர சபையிடம் கையளிக்கப்படும்வரை, நிதி ரீதியான தன்னிறைவுடன் முழு அளவில் அதன் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்நிதியமானது ஒரு வினைத்திறன் மிக்க நிலைமாற்று பொறிமுறையினை வழங்குகின்றது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையமானது, யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாண இளைஞர்கள் மற்றும் மக்களின் கலை, கலாசாரம் மற்றும் கல்விச் செழுமைக்கான ஒரு துடிப்பான மையமாக மாறும் என்ற தொலைநோக்கு விரைவில் நனவாகுவதற்கு இந்த நிதியம் பங்களிப்பு வழங்கும்.

Bootstrap