அமெரிக்காவின் புதிய தடைகள் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீதான அமெரிக்காவின் புதிய தடைகள், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு உறவுகளை பாதிக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீதான தடைகளை விரிவுபடுத்தும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அதன் மூலம் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் சீனா, இந்தியா மற்றும் பிற நாடுகள் மீது 100 சதவீதம் வரை தண்டனை வரிகளை ட்ரம்ப் விதிக்க முடியும்.
இந்த நிலையில் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) ஜனாதிபதி ட்ரம்பின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தினசரி செய்தியாளர்களை சந்தித்தபோது, "ட்ரம்ப் இந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது நமது இருதரப்பு உறவுகளைப் புத்துயிர் பெற செய்வதற்கு நிச்சயமாக பங்களிக்காது.
உக்ரைனில் ஒரு தீர்வை நோக்கிய பாதையில் மேலும் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கு இது பங்களிக்கும் என்பதும் நிச்சயமாக சாத்தியமில்லை" என்று கூறினார்.
முன்னதாக, தடைகள் தொடர்பான சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.