அதிக சம்பளத்திற்கு கனடாவில் வேலை பார்த்துவந்த பெண், தனது பெற்றோருடன் நேரத்தை செலவழிக்க மீண்டும் இந்தியாவிற்கு வரவுள்ளார்.
கனடாவில் டெலாய்ட் நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்துடன் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளி பெண் ப்ரீதி பிஸ்னிக், தனது பெற்றோரின் வயது காரணமாகவும், தனிப்பட்ட உடல்நலக் காரணங்களாலும், வேலைவிட்டு இந்தியா திரும்புவதாக அறிவித்துள்ளார்.
ப்ரீதி, ரொறன்ரோவில் சீனியர் கன்சல்டன்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்த அவர், “எனது பெற்றோரின் உடல்நிலை தான் இந்த முடிவுக்கான முக்கிய காரணம்” என்று கூறினார்.
அவரது தந்தை வயதான நிலையில் உள்ளார், தாயார் நடப்பதில் சிரமம் மற்றும் பார்வை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
ப்ரீதி, “எனது தாயாருக்கு ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, வலிமை பயிற்சி ஆகியவற்றில் உதவ விரும்புகிறேன். கனடாவில் நான் கற்றுக்கொண்ட Nutrition அறிவை பயன்படுத்தி அவர்களை ஆதரிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
யாரும் தன்னை நாட்டைவிட்டு வெளியேற சொல்லவில்லை என்றும், அவர் கனேடிய குடியுரிமை கொண்டுள்ளதாகவும், தனக்கு கனடாவில் இரண்டு சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வேலை குறித்த எந்த அதிருப்தியும் இல்லாமல், தனது குழுவும், சம்பளமும் சிறப்பாக இருந்ததாகவும், மேலாளர் சபாட்டிக்கல் விடுப்பு வழங்க முன்வந்ததாகவும், ஆனால் தானாகவே விலக முடிவு செய்ததாகவும் கூறினார்.
மேலும், தனது உடல்நலப் பயணமும் இந்த முடிவில் தாக்கம் செலுத்தியதாக ப்ரீதி கூறினார். இந்தியாவில் இருந்து கனடா சென்றபோது 78 கிலோ எடை கொண்டிருந்த அவர், பின்னர் 98 கிலோ வரை எடை அதிகரித்தது.
தற்போது 10 கிலோ குறைத்த நிலையில், கணினி முன் அமர்ந்து செய்யும் sedentary lifestyle-இல் இருந்து விலகி, உடற்பயிற்சி மற்றும் இயக்கம் நிறைந்த வாழ்க்கையை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
“இப்போது நான் கணினி முன் வேலை செய்ய விரும்பவில்லை. உடற்பயிற்சி செய்து, பெற்றோருடன் நேரம் செலவிட விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
ப்ரீதி, தற்போது தனது பெற்றோரின் நலனிலும், தனிப்பட்ட உடல்நலத்திலும் கவனம் செலுத்துவதாகவும், அடுத்த ஆண்டு தான் தனது தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.