ஜப்பானில் சக்திவாய்ந்த புயல் - இருவர் உயிரிழப்பு

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயல், தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக, 16 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வெளியேற்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

Dujuan புயல் மணிக்கு சுமார் 144 கிலோமீட்டர் (89 மைல்) வேகத்தில் காற்றுடன், டோக்கியோவுக்கு அருகிலுள்ள கட்சூரா (Katsuura) நகருக்கு தெற்கே 130 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நேற்று அதிகாலையில், புயல் கடற்கரையை விட்டு விலகி, வடகிழக்கு திசையில் கடலை நோக்கி நகர்ந்தது. பின்னர் Aleutian தீவுகள் நோக்கிச் செல்லும் நிலையில், அதன் காற்றின் வேகம் சற்று குறைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில், புயல் வடக்கு நோக்கி நகர்ந்தாலும் தொடர்ந்து கனமழை பெய்யும் அபாயம் உள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று Japan Airlines 135 விமானங்களையும், All Nippon Airways 140 விமானங்களையும் ரத்து செய்தன. இதனால் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் சிக்கித் தவித்தனர்.

மேலும், டோக்கியோ–ஒசாகா இடையிலான புல்லட் ரயில் சேவைகள் உள்ளிட்ட சில ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டதாக ஜப்பான் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Bootstrap