காசாவில் போர்நிறுத்தம் அமலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஒரு வாகனம் குறிவைக்கப்பட்டதாக உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மது அபு அல்வான் எனவும், அவர் ஹமாஸ் அமைப்பின் நிதிப் பிரிவின் தலைவராக இருந்ததாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த அடையாளம் மற்றும் ஹமாஸ் நிதிப் பிரிவுடனான அவரது தொடர்பு தொடர்பாக சுயாதீன உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
இத்தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கான் யூனிஸின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு பாலஸ்தீனர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா நகரின் வடகிழக்குப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்து மூவர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய காசாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் இராணுவத்தின் உடனடி விளக்கம் வெளியாகவில்லை.
போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருப்பதாகக் கூறப்படும் நிலையிலும் காசாவில் தாக்குதல்கள் தொடர்கின்றன. போர்நிறுத்த மீறல்களுக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன.
போர்நிறுத்தம் தொடங்கிய பின்னரும் காசாவில் 1,400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.