மட்டக்களப்பு மாங்கேணியில் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு, வாகரை மாங்கேணி பகுதியில் தியாகதீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலின் 9ஆம் நாள் நிகழ்வு இன்று (23) இடம்பெற்றுள்ளது.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வாகரைப் பிரதேச செயற்பாட்டாளர் ர. தயாகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் குழுவினரும் இணைந்துகொண்டனர்.

நிகழ்வில் அருட்தந்தை, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ். சுவேந்திரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ. அமலநாயகி, சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ். சிவயோகநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயற்பாட்டாளர் ஜெ. ரஜனிதேவி உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது திலீபனின் உருவப்படத்திற்கு அருட்தந்தையால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மாவீரர் லெப்டினன்ட் கேணல் வேலுவின் தாயாரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பங்கேற்றவர்கள் மலர்தூவி அகவணக்கம் செலுத்தியதுடன், நினைவுரைகளும் இடம்பெற்றன.

திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் செப்டெம்பர் 15 முதல் 26ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற முதல் நிகழ்வாகவும், மாங்கேணி பகுதியில் இடம்பெற்ற முதல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வாகவும் இது அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Bootstrap