இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கம்யூனிஸ்ட் நாடான சோவியத் மற்றும் அமெரிக்கா ஆகியவை உலகின் வல்லரசுகளாக உருவெடுத்தன. சுமார் 40 ஆண்டுகள் இந்த இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்த பனிப்போர் 1990களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது.
இதனால் உலகின் ஒரே வல்லரசாக அமெரிக்கா திகழ்ந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மற்றொரு வல்லரசாக சோவியத்தின் இடத்தில் மற்றொரு கம்யூனிச நாடான சீனா உருவாகியுள்ளது. சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் சீனாவை கடுமையாக விமர்சித்து வந்தார்.
சீனாவுக்கு கூடுதல் வரிகளை விதித்த டிரம்ப், சீன நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரிகளை விதித்தது. இந்த சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்தித்து பேசவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்துப் பேசுவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றிருந்தார். அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமான நிலையத்துக்கே நேரில் சென்று வரவேற்றார். 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒருவர் வெளிநாட்டுத் தலைவரை விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து இருவரும் விமான நிலையத்திலேயே சிறிது நேரம் உரையாற்றிய நிலையில், அது குறித்த விவரங்களை சீன அரசின் செய்தி நிறுவனமான 'சின்ஹுவா' (Xinhua) வெளியிட்டுள்ளது. அதில் சீனாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவோ அல்லது போட்டியாளர்களாகவோ (Rivals) இல்லாமல், கூட்டாளிகளாகவே (Partners) இருக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் ட்ரம்பிடம் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இந்த கருத்தை டிரம்ப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் இன்று சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். அதில் பல்வேறு முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடைய சீன அதிபரின் கருத்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்துவந்த மோதலில் சில நாடுகள் அமெரிக்காவுக்கும், சில நாடுகள் சீனாவுக்கும் ஆதரவாக செயல்பட்டு வந்தன. இந்த சூழலில் அமெரிக்காவும் சீனாவும் பகையை மறந்து கூட்டாளியாக மாறும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் மாறுவது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு நிலவி வரும் நிலையில், சீனா பாகிஸ்தானுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறது. இதனால் இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட குவாட் ராணுவ அமைப்பிலும் இணைந்துள்ளது. இந்த சூழலில் சீனாவும் அமெரிக்காவும் நெருங்கி வருவது இந்தியாவின் நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.