ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ஆரம்பித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகப் பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்த நிலையில், அவர் தனது உரையில் நிவ்யோர்க் நகர முதல்வர் சோஹ்ரன் மம்தானி உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் மேடையேறியபோது பல நாடுகளின் பிரதிநிதிகள் சபையிலிருந்து வெளியேறினர்.
அவர்களைப் பார்த்த நெதன்யாகு, "இந்த மண்டபத்தை விட்டு இன்னும் வெளியேறாத வேறு ஏதேனும் ஒழுக்கமற்றவர்கள் இருந்தால், தயவுசெய்து இப்போது வெளியேறுங்கள்" எனப் தெரிவித்ததுடன், தனது நாட்டைப் பற்றியும் வீரர்களைப் பற்றியும் பொய்யை பரப்புபவர்கள் வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நிவ்யோர்க் நகர முதல்வர் சோஹ்ரன் மம்தானி தன்னை நிவ்யோர்க்கிற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றதாகவும், தனது குரலை ஒடுக்கப் பார்த்ததாகவும் குறிப்பிட்ட நெதன்யாகு, "உங்களால் உண்மையை ஒடுக்க முடியாது" என்றார்.
அத்துடன், மம்தானி தனது நாட்டைப் பற்றியும் இஸ்ரேலியப் படையினர் மீதும் ஆதாரமற்ற பொய்களைப் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் இனப்படுகொலை அல்ல என்றும், அது காசா மக்களையும் இஸ்ரேலையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்றும் அவர் நியாயப்படுத்தினார்.
அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் இராணுவ மற்றும் அணுசக்தி திறன்களை நொறுக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்ரேலுக்கு அமெரிக்காவை விடச் சிறந்த பங்காளி யாருமில்லை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.