அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தனக்கு எதிராக மீண்டும் ஏதேனும் தாக்குதல்களைத் தொடுத்தால், மத்திய கிழக்கு மோதலை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மூத்த ஆலோசகரான மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபவி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானுடனான மோதல் ஏற்கனவே பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டி செங்கடல் வரை பரவியுள்ளதாக சஃபவி சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் போர் வெடித்தால், இந்த மோதல் களம் இந்தியப் பெருங்கடல் அல்லது பிற பிராந்தியங்களுக்கும் விரிவடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் என்பது உலகின் முக்கிய எரிசக்தி மற்றும் வர்த்தக பரிமாற்றப் பாதைகள் அமைந்துள்ள பகுதியாகும்.
இதனால், போர் இந்தியப் பெருங்கடலுக்குப் பரவினால் அது உலகளாவிய கடல் போக்குவரத்து, எரிசக்தி விநியோகம் மற்றும் குறிப்பாக ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச விமர்சகர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இதற்கிடையில், ஓமான் கடற்கரைக்கு அருகில் ஆன்டிகுவா கொடியின் கீழ் பயணம் செய்த கப்பல் ஒன்று தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 26 வயது இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 மாலுமிகள் ஓமான் அரச கடற்படையால் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.