அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை பல்வேறு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
KM Garuda Jaya VI என்ற இந்தோனேசிய மீன்பிடி இழுவைப் படகு, கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடம்பெற்றதுடன், படகில் இருந்த கடற்றொழிலாளர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளதாக ஆரம்பத்தில் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, MV Moonstone என்ற வர்த்தகக் கப்பல் கடலில் தத்தளித்த 25 பேரையும் மீட்டு, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (MRCC) தகவல் வழங்கியுள்ளது.
அவசர அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், MRCC கொழும்பின் ஒருங்கிணைப்புடன் இலங்கை கடற்படை இரண்டு படகுகளை அனுப்பி, MV Moonstone கப்பலால் மீட்கப்பட்ட 25 கடற்றொழிலாளர்களையும் கரைக்கு அழைத்து வந்துள்ளது.
இதன்போது, மீட்கப்பட்டவர்களுக்கு கடற்படையினரால் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.