பயங்கரவாத ஆதரவு குறித்து கேள்வி - பதிலளிக்க முடியாமல் சென்ற பாகிஸ்தான் பிரதமர்!

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வருகை தந்தபோது, அங்கு கூடி இருந்த செய்தியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் அவரை நோக்கிச் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

முக்கியமாக, "பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் எப்போது நிறுத்தும்?" மற்றும் "லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹஃபிஸ் சயீத் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள்?" போன்ற கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன.

செய்தியாளர்களின் இந்தக் கேள்விகளைக் கேட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், அதற்கு எவ்வித பதிலையும் அளிக்காமல் அமைதியாக வெளியேறியுள்ளார்.

இதன்போது எந்தவித கருத்தும் தெரிவிக்க மறுத்த அவர், தனது கையை அசைத்தபடி அங்கிருந்து அமைதியாக வெளியேறிச் சென்றார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bootstrap