நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும்.
ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகின் 99 சதவீத மக்களை விட, KCL தனது கடந்த கால நிகழ்வுகளை இளம் வயதிலிருந்தே சிறப்பாக நினைவுகூர்கிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், கிரெனோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வாளர் கிரிஸ்டியன் பார்சிகோவ்ஸ்கிக்கு, தனக்கு அதிகப்படியான நினைவாற்றல் இருப்பதாக அந்த சிறுவனிடமிருந்து மின்னஞ்சல் வந்துள்ளது.
அதன் பின்னர் KCL ன் நினைவாற்றல்களை பரிசோதித்த அந்த குழு, சீரற்ற முறையில் 15 தேதிகளை கொடுத்து, அந்த நாளில் நடந்த ஒரு முக்கியப் பொது நிகழ்வையோ, தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளையோ கூறுமாறு கேட்டுள்ளனர்.
இதில், KCL நடந்த நிகழ்வுகளை 83 சதவீதத் துல்லியத்துடன் நினைவு கூர்ந்தார்.
3 மாதக் குழந்தையாக(ஏப்ரல் 2009) இருந்தபோதே தோன்றிய நிகழ்வுகளை கூட அவரால் நினைவு கூற முடிவதாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோரால் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆரம்பகால குழந்தை பருவ (2010–2011) நினைவுகளும் அவருக்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
KCL-இன் மூளைக்குள் அசாதாரணமாக நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பிறப்பிலிருந்து அவனது வளர்ச்சி, எந்த மனநல அல்லது கல்வி சார்ந்த பிரச்சினைகளும் இன்றி, இயல்பாகவே இருந்தது என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாசனை, ஒரு சிறு இசைத் துணுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட வாக்கியம் போன்ற மிகச் சிறிய தூண்டுதல்களால்கூட தனது நினைவுகள் அடிக்கடி தூண்டப்படுவதாக KCL கூறியுள்ளார்.
மேலும், ஒரு நாளில் பல மணி நேரங்களில் இது போல் நினைவுகளில் மூழ்கி விடுவதாக தெரிவித்துள்ளார். HSAM பாதிப்புள்ளவர்களிடம் இது பொதுவாகக் காணப்படுகிறது.
மிகவும் மேம்பட்ட சுயசரிதை நினைவாற்றல் (HSAM) என்று அழைக்கப்படும் இந்த நிலை, உலகில் 100க்கும் குறைவான மக்களுக்கே இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
HSAM நோய் குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றலில் மிகச்சிறந்தவர்கள் அல்ல. அன்றாடத் தகவல்களைக் கற்றுக்கொள்வது அல்லது எண்களை மனப்பாடம் செய்வது போன்ற விடயங்களில் பெரும்பாலும் பொதுமக்களுடன் ஒப்பிடத்தக்கவர்களாகவே உள்ளார்கள்.
ஆனால், அவர்கள் கண்ட, வாழ்ந்து அனுபவித்த தன்வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் நினைவில் கொண்டு அணுகும் விதமே அவர்களை வேறுபடுத்துகிறது.