ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானின் முன்மொழிவை ஏற்று, அதற்கான தனது கடமைகளை நிறைவேற்றினால், ஈரானும் தனது கடமைகளை நிறைவேற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான புதிய திட்டம் தொடர்பில் இராணுவம், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழு கலந்துரையாடி வருவதாகவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் முன்மொழிவு தொடர்பில் அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்தில் முக்கிய கடல்வழியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான இந்த நிலைமை, அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதலில் முக்கிய விவகாரமாக தொடர்கிறது.